டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை

   
       

                     டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை

                 

 
 தமிழகத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது டெங்கு காய்ச்சல். தினமும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். ஆனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பை மறைக்க அரசு முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாகக் காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகும் சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்தவரை அணுக வேண்டும்.

ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்புத் தீவிரமாக உள்ள நிலையில், நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் சூழலில் காய்ச்சல் வந்தாலே உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் என்று வந்தால் தொடக்கத்திலேயே ரத்த பரிசோதனை செய்ய வேண்டாம் என்று அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, பா.ம.க இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு இப்படி ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தால் உண்மையில் அது கண்டிக்க வேண்டிய விஷயம்தான். டெங்கு காய்ச்சல் தீவிரமான நிலையில் நோயாளியைக் காப்பாற்றுவது மிகமிகக் கடினம். அதுவே, ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றலாம்.

டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், டெங்கு ஏற்படுத்தும் அதிகபட்ச காய்ச்சல், ரத்தக் கசிவு, ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவு போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை உள்ளது. சரியான நேரத்தில் இந்த அறிகுறிகளுக்கான சிகிச்சை எடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிகிச்சையை எடுக்கும்போது உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும்.

ஆனால், வாய்ப்பு உள்ள நேரத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு, டெங்கு தீவிரமான நிலையில் ரத்த பரிசோதனை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக டெங்கு கொசு கடித்த ஐந்து நாட்களில் காய்ச்சல் தொடங்கும். 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல் செல்லும். தலைவலி, உடல் வலி, மூட்டு வலி இருக்கும். வாந்தி, குமட்டல் போன்றவை இருக்கும்.

இந்த நேரத்தில், டெங்கு காய்ச்சல்தானா என்பதைக் கண்டறியும் டெங்கு சீரம் டெஸ்ட் செய்ய வேண்டும். இதனுடன், பிளட் கவுண்ட் எனப்படும் வழக்கமான ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனையில் பிளேட்லெட்ஸ் (ரத்த தட்டு அணுக்கள்) எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

ஒருவேளை டெங்கு உறுதியானால், இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன்மூலம் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை குறைவதைக் கண்காணிக்க முடியும். 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தால் பிளேட்லெட்ஸ் ஏற்ற வேண்டியிருக்கும்.

காய்ச்சல் தணிய, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து நெற்றி, கழுத்து, அக்குள் பகுதியில் வைத்து எடுக்கலாம்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு அருந்தலாம். இதனுடன், அதிக அளவில் திரவ உணவுகள் எடுக்க வேண்டும். இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கேரட் எனப் பழங்கள், காய்கறி ஜூஸ் அருந்தலாம். சளி பிடித்துக்கொள்ளும் என்ற கவலை தேவையில்லை. நமக்கு உயிரைக் காப்பாற்றுவதுதான் மிக முக்கியம். இப்படித் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது டெங்கு பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கும்... பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

அனைத்திலும் மிக முக்கியமானது சுய மருத்துவத்தைத் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சலின் போது உடல் வலி இருக்கும். இதனால், பலரும் சுய மருத்துவம் செய்துகொள்கின்றனர். இதுதான் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம். டெங்கு பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே போதும் டெங்குவை வெல்லலாம்!

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயின் தீவிரம் கட்டுக்குள் இருக்க.

சோற்றுக் கற்றாழையின் அளவில்லாத பல நன்மைகள் !!!

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!